top of page

HADEES INFO

1 ஜுமுஆத் தொழுகை கட்டாயக் கடமை (ஃபர்ள்) ஆகும். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு,அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிகளுக்கு) விரைந்துசெல்லுங்கள்- நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (62:9) 
876. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
'நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
ஜுமுஆ நாளில் குளிப்பதன் சிறப்பும், சிறுவர்கள் பெண்கள் ஆகியோர் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்வது அவர்கள் மீது கடமையா என்பதும். 
877. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
'உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்' 
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஆரம்ப காலத்திலேயே ஹிஜ்ரத் செய்த நபித்தோழர் ஒருவர் வந்தார். அவரை உமர்(ரலி) அழைத்து 'ஏனிந்தத் தாமதம்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'நான் அலுவலில் ஈடுபட்டு விட்டேன். பாங்கு சப்தத்தைக் கேட்டு(க் குளிக்காமல்) உளூ மட்டும் செய்துவிட்டு வேகமாக வருகிறேன்' என்று கூறினார். அதற்கு உமர்(ரலி) 'உளூ மட்டும்தான் செய்தீரா? நபி(ஸல்) அவர்கள் குளிக்குமாறு கட்டளையிட்டுள்ளனர் என்பது உமக்குத் தெரியுமே!' என்று கேட்டார்கள். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
'ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.' 
என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். 
அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். 
'ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அபூ ஸயீத்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அம்ர் இப்னு ஸுலைம் 'குளிப்பது அவசியம்' என்பதை நான் உறுதியாக அறிவேன். ஆனால் பல் குலக்குவதும் நறுமணம் பூசுவதும் கடமையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஹதீஸில் அப்படித்தான் உள்ளது' என்று குறிப்பிட்டார்கள். 
bottom of page